title


காலகண்டம் - உருகியோடும் பொன்னுலகம்

அருணாவின் தாலிக்கொடிக்குள் இருக்கும் வெள்ளிசரடு நெகிழ்ந்து விட்டது. அதை சரிசெய்வதற்காக, சென்ற வாரம் நானும் அப்பாவும் அவினாசி சென்றிருந்தோம். அவினாசி “தம்பியண்ணன் சில்வர்ஸ்” கடைக்கு முன் அமர்ந்திருந்த ஆசாரியண்ணன் தாலிக்கொடியை கொஞ்ச நேரம் ஆராய்ந்தார்.

“வெள்ளிசரட பத்த வெச்சா மறுபடியும் இதே பிரச்சன வரும்; பேசாம உருக்கி கம்பி மாதிரி செஞ்சுரலாமா? ஒரு முந்நூறுபா ஆகும்” என்றார்.

“எது நல்லாருக்குமோ அதுமாதிரியே செஞ்சிருங்க” 

பதிலைக் கேட்டதும், வேலையை துவங்கினார். முதலில் தாலிக்கொடிக்குளிருந்து வெள்ளிச்சரடை உருவியெடுத்தார். தன்னிடமிருந்த மரக்கட்டையின் குழிவான ஒரு பகுதியில் வெள்ளிச்சரடை வைத்து மற்றொரு பகுதியை பிடித்துக்கொண்டார். கிட்டத்தட்ட கேஸ் லைட் மாதிரி இருக்கும் விளக்கை பற்றவைத்தார். முனை வளைந்த மெல்லிய ஊதாங்குழலை எடுத்து மரக்குழிக்குள் இருக்கும் வெள்ளிச்சரடின் மீது நெருப்பு படுமாறு “ப்பூ, ப்பூ” என ஊதலானார். இரண்டு நிமிடங்களில் மரக்குழி முழுதும் தீக்கங்குகளாய் மாறியது, தொடர்ந்து பாய்ந்து கொண்டேயிருந்த நெருப்பு மழையால் மெல்ல மெல்ல உருகத்துவங்கியது வெள்ளிச்சரடு.

நம்பி, கிருட்டிணன் ஆசாரி, சன்னாசி, முத்துராஜ், சோலையப்பன், சென்றாயல் என பல பெயர்கள் என்னுள் ஓடத்துவங்கின. இந்த பெயர்கள் எதுவும் நிகழ்காலத்தை சேர்ந்தவை அல்ல. ஆனால் இந்த பெயர்களுக்கும் 2015 செப்டம்பர் மாதம் அவினாசியில் வெள்ளிச்சரடை உருக்கிக்கொண்டிருந்த ஆசாரியண்ணனுக்கும் ஒரு இணைப்பிருக்கிறது. என்னுள் ஓடிய பெயர்களின் சொந்தக்காரர்கள் அனைவரும் வேறு வேறு காலகட்டத்தில் வாழ்ந்திருந்த ஆசாரிமார்கள். என்ன சொன்னேன் (எழுதினேன்?) காலகட்டம் என்றா, இல்லை இல்லை இவர்கள் “காலகண்டத்தில்” வாழ்ந்திருந்த நகை ஆசாரிகள்.

“காலகண்டம்” திரு.எஸ்.செந்தில்குமார் எழுதி உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நாவல் (விலை : ரூ400/-).



ஆபரணத்தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு சமூகத்தின், 500 ஆண்டு காலவரலாறிலிருந்து, ஒரு 150 ஆண்டு காலத்தை சித்தரிப்பதன் வாயிலாக ஏறத்தாழ ஐந்து தலைமுறைகளின் வாழ்வை, அதனூடாக தங்க வேலை செய்யும் பொன் ஆசாரிமார்களின் ஏற்றத்தாழ்வை சிறப்பாக பதிவு செய்திருக்கும் நாவல் “காலகண்டம்”. பொன் வேலை செய்யும் போனூர் கிருட்டிண ஆசாரியில் துவங்கி, கிருட்டிண ஆசாரியின் குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறையான நம்பி ஆசாரியின் மரணத்தில் முடிகிறது நாவல். கதை என்றெல்லாம் எதையும் குறிப்பிட்டு சொல்லமுடியாது, மாறாக இந்த நாவல் வாழ்க்கையை, அதன் அசலான இன்ப துன்பங்களை, வலியுடனும் வருத்தங்களுடனும் பதிவு செய்கிறது.

காசாய் இருக்கும் தங்கம் ஆபரணமாக மாறுவது ஏற்றம், நகையை உருக்கி மீண்டும் காசாக்குவது ஏதேனும் ஒரு வகையில் இறக்கம் என வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் நகை வேலையுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. பட்டறைகளில் ஆபரணங்கள் செய்ய ஆர்வம் காட்டுவதும், நகையை உருக்கி காசாக்கும் வேலையை கொஞ்சம் மட்டாக கருதுவதும் பதிவு செய்யப்பட்டிருப்பது அதன் நீட்சி என எண்ணுகிறேன். நேரடியாக மக்களிடமிருந்து ஆர்டர் எடுத்து நகை செய்து பட்டறை முதலாளியாக வாழ்ந்த காலம் போய் முதலாளிகளிடமிருந்து ஆர்டர் எடுத்து வேலை பார்த்துத்தரும் காலம் வருகிறது. அன்றாடம் தர வேண்டிய வேலைக்காக முதலாளி சமூகத்துக்கு கூழைக்கும்பிடு போடவேண்டிய காலம் அது. இடையில், செல்வாக்கு கொஞ்சம் சரிந்து, அடுத்தவர் பட்டறைக்கு வேலைக்கு செல்லும் அவலமும், பொன் நகை செய்யும் வேலை இல்லாமல் பட்டறையில் ஒட்டு வேலை செய்ய நேரும் காலமும் என வேறு வேறு பாத்திரங்களின் வாயிலாக ஆபரணத்தொழிலின் பரிமாணங்கள் சிறப்பாக வெளிப்படுகின்றன. இடையிடையே மனித மனத்தின் இருளடைந்த பகுதிகளும், காலத்தின் கைகளில் மனிதன் வெறும் பகடைதான் என்பதும் நிறுவப்பட்டுள்ளது.

ஒரு சமூகத்தை அதன் வாழ்க்கையை, குறிப்பாக அதன் வலிகளை பதிவு செய்திருக்கிறது “காலகண்டம்”. ”புலிநகக் கொன்றை”போலவே இந்த நாவலும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்த அனுபவத்தைத் தந்தது.


No comments: