title


டமார் - II



”ஒண்ணும் பிரச்சனை இல்லைங்க கடைசி வண்டி கண்டக்டர் நம்ம பிரண்டுதான்” நம்பரை வாங்கியவுடன் குரலில் உற்சாகம் மேலிட சொன்னார் ”திரு. ராஜ்” எங்கள் பேருந்து நடத்துனர். ”யாருப்பா?” எனக்கேட்ட ஓட்டுனரிடம் மகிழ்ச்சியுடன் சொன்னார் “அதான்பா நம்ம சுந்தரமூர்த்தி.. பல்லடத்துக்காரன்”. அதே உற்சாகத்துடன் போன் செய்து பேசத்துவங்கினார்.

“யாரு சுந்தரா? நான் ராஜ் பேசறேன்பா…. அது வேற ஒண்ணுமில்ல இன்னிக்கு ஷிப்டு என்னோடது… நம்ம வண்டி இங்க “Womens Polytechnic” கிட்ட கண்ட்ரோல் இல்லாம நிக்கிது; ஒரு 14 பேரு இருக்காங்க டிக்கட்டும் அடிச்சாச்சு; அதான் ஒங்க வண்டி இப்ப வருமுல்ல… அண்ணா செல வழியா போகாம “Womens Polytechnic” வழியா வரசொல்லலாம்னு
……
யோவ்… என்னயா சொல்லற ? இது எப்ப நடந்தது ?
…….
சரி மாப்ள…. சோலி சுத்தம் நல்லா சாப்பிட்டு தூங்கு” உற்சாகமெல்லாம் வடிந்தவராய் செல்லை வைத்தார் எங்கள் பேருந்து நடத்துனர். அதுவரை அங்கு நடந்த நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பயணிகள் பொறுமை இழக்கத்துவங்கினோம். என்ன ஆனதென்பதை அவரும் சொல்வதாகத் தெரியவில்லை. சில நிமிடங்களிலேயே “என்ன சார் ஆச்சு?” என எல்லோரும் நச்சத்துவங்கினோம். எல்லோரையும் அமைதிப்படுத்திவிட்டு சலித்துக்கொண்டே சொன்னார் திரு. ராஜ் “அது, கடைசி பஸ்ஸூம் ஏதோ ரிப்பேராமாங்க… அதனால அது போன சிங்கிள் கூட போகாம டிப்போலதாங்க நிக்கிது”. நம்பமுடியாமல் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். “இனி வேற வழியில்ல… பேசாம ”AE” க்கு போன் போட வேண்டியதுதான்” என சொன்னார் ஒட்டுனர். இதுவரை மாற்றி மாற்றி போன் பேசியதில் நடத்துனரின் செல் balance காலி. ஒட்டுனரின் செல் எப்போதோ SwitchOff ஆகிவிட்டது. எங்களில் ஒருவரிடம் செல்லை வாங்கியவர் டிப்போவுக்கு போன் செய்து அவர்கள் மூலமாக AE விடம் பேசத்துவங்கினார்.

ஹலோ.. சார் வணக்கங்க சார். நான்ராஜ்பேசறங்க…. 7286 திருப்பூர் பஸ் கண்டக்டர்; இங்க “Womens Polytechnic” பக்கத்துல்ல பஸ்ல பேக் வீல் ரீப்பர் கட்டாயிடுச்சு; பஸ் ஓட்டறதுக்கு கண்ட்ரோல் இல்லீங்க..ஒரு 15 பேர் இருக்காங்க டிக்கட் வேற அடிச்சாச்சு;
…….
இல்லீங்க சார் வேற பஸ் எதுவும் டிப்போல இல்லையாமங்க சார்; கடைசி சிங்கிள் பஸ்ஸூம் ஏதோ ரிப்பேருன்னு டிரிப் கேன்சலாயிடுச்சு; பேசஞ்சர்ஸ் எல்லாரும் சண்டைக்கு வராங்க
…..
அதான் வேற என்ன பண்ணலாம்ன்னு… UnTime வேற ஆயிடுச்சு சார் லேடீஸ் எல்லாம் நிக்கறாங்க…
……
இதோ ஒரு நிமிஷம் சார்” என்றவர் ஓட்டுனரிடம் செல்லைக் கொடுத்தார்.

“சார் சொல்லுங்க நான் டிரைவர் பேசறேன்…
சார், அது கண்டிப்பா முடியாதுங்க.. உப்பிலிபாளையம் எங்கயிருக்கு.. பேசஞ்சர் எல்லோரையும் வச்சிகிட்டு ரிஸ்க்குங்க சார். அதுவும் வண்டி சுத்தமா கண்ட்ரோலே இல்ல.. மெயின் ரோட்ல ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆயிடுச்சுன்னா பெரிய ப்ராப்ளமாயிடும்
...
சரீங்க சார் கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க” என போனை கட் செய்தவர் நாங்கள் விசாரிக்க வேண்டிய தேவையே இல்லாமல் குமுறினார்

“என்ன ஒரு புத்தி பாருங்க… எல்லாரையும் ஏத்திக்கிட்டு மொல்ல மொல்ல உப்பிலிபாளையம் ஷெட்டுக்கு ஓட்டிட்டு போய் வண்டிய சரி பண்ணிட்டு, அதுக்கப்புறமா திருப்பூர் போறதாமா…. வண்டி இருக்கற நெலமைல உருட்டிட்டுதான் போக முடியும் ஒரு 2 மணி நேரமாவது ஆயிடும். அப்பக்கூட போகமுடியும்ன்னு எந்த கேரண்டியும் கெடயாது; அதான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்” மூச்சுவிடாமல் பேசியவரிடம் மீண்டும் கேட்டோம் “சார் கடைசியா என்னதான் சொன்னாரு ?”

”அவரே மறுபடியும் கூப்பிடுறாராமாங்க”

No comments: