title


டமார் - III கடைசி பாகம்



இந்த முறை ஒரு பத்து நிமிடம் பொறுத்துப்பார்த்த செல்போனின் ஓனர் அவரே “Last Dialed Number”யில் இருந்து டிப்போவுக்கு “போன்” செய்து பேசத்துவங்கினார். இதையறியாத நடத்துனரும், ஓட்டுனரும் பேருந்து சக்கரத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்…

“ஹலோவ்.. நா இங்க அப்செட் ஆகி நிக்குற திருப்பூர் பஸ்ல வந்த பேசஞ்சர் பேசறங்க” என மரியாதையாகத்தான் பேசத்துவங்கினார். ஆனால் போகப் போக வார்த்தைகள் தடித்து வேறுவிதமாக பேசலானார் (காரணம் வேறென்ன, அரசாங்கம் பொது மக்களிடம் காட்டும் அதே அலட்சியத்தை அரசாங்க ஊழியரும் இவரிடம் காட்டியிருப்பார்)

“யோவ் இங்க பொண்டாட்டி கொழந்தைகளோட நடுத்தெருவுல நிக்கறோம்ன்னு சொல்லிட்டிருக்கன் நீ என்னடான்னா ஓவரா ரூல்ஸ் *யிரு பேசற
……
என்னது,  **ராண்டி போன மட்டும் இப்ப வச்ச, ஆட்டோ புடிச்சு நேரா டிப்போவுக்கே வந்திடுவோம்… மரியாதையா போன உன்னோட AE ஆபீசர்கிட்ட குடு” இப்போது லயனில் வந்தவர் AE அவரிடம் இதே கோவத்தை கொஞ்சம் மரியாதை கலந்த குரலில் காட்டலானார் நம்ம ஹீரோ..(இடையில் ”சார் சார் போன குடுங்க நாங்க பேசறோம்”ன்னு கெ(கொ)ஞ்சின நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு “ஆமா நீங்க சொன்னா மட்டும் கழட்டிடுவான்னுங்களா” என அர்ச்சனை விழுந்தது தனிக்கதை)

“சார் இங்க நாங்க 15, 20 பேரு நடுரோட்ல இருக்கம்… வேற பஸ் ஏதாவது ஏற்பாடு பண்ணுங்கன்னு கேட்டா.. அங்க டிப்போல இருக்கற உங்க ஆளு ரொம்ப ஓவரா ரூல்ஸ் பேசறாப்ல;
……
அதில்ல சார் நீங்க எங்க நெலமைல இருந்தும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க.... நடுராத்திரி வேற பஸ்ஸும் இல்ல, டிப்போல இருந்து ஏதாவது பஸ்ஸ அனுப்புங்கன்னு கேட்டா, அந்தாளு ஒன்னால என்ன பண்ணமுடியும்ங்கற மாதிரி பேசறாரு
…..
இல்லீங்க என்ன பண்ணமுடியும்ன்னு பாக்குறீங்களா? கல்லெடுத்து பஸ் கண்ணாடிய பூராம் ஒடச்சு போடுவோம்… என்ன மீறிப்போன கைது பண்ணுவீங்க ஆனா பேப்பர்ல பூராம் வருமுல்ல” என நம்மாளு ரமணா பட விஜயகாந்த் ரேஞ்சுக்கு பேசிக்கொண்டே போனார்.

நிலைமை கைமீறிப்போவதை புரிந்துகொண்ட அவரது மனைவி இப்போது களத்தில் குதித்தார். “ஏங்க.. ஏங்க பஸ்ஸ அனுப்புங்கன்னு கேட்க சொன்னா அத விட்டுட்டு கல்லெடுப்பேன் கண்ணாடிய ஒடைப்பேன்னு என்னன்னமோ பேசுறீங்க” என்றவரிடம் பாய்ந்தார் நம் சிங்கம் “போடி அக்கட்டால..அறஞ்சு பல்ல கில்ல கழட்டிடுவேன். யெல்லாரும் சேந்து நம்மள கேணப்பயலாகிவாங்க போல இருக்கு; கொஞ்சம் மரியாதையா கேட்டா நம்மள ஒண்ணுந்தெரியாத கிறுக்கன்னு நெனக்கிறாங்க ” இந்த கர்ச்சனை லயனில் இருக்கும் ஆபீசருக்கும் கேட்டிருக்கும் போல. அடுத்து வந்த சம்பாசனைகள் கொஞ்சம் சுமூகமாகவே இருந்தன. லயனை கட் பண்ணினவுடன் அறிவித்தார் ஹீரோ “இன்னும் 10 நிமிசத்தில கூப்பிடுறாராமா… பாக்கலாம்; இல்லாட்டி வேற ஏதாவதுதான் செய்யனும்”. தொடர்ந்து ஒரு நிமிடத்துக்கு 2 முறை என தன் செல்போனை முறைத்துப் பார்த்துக்கொண்டேயிருந்தார்.

அவரது அதட்டலுக்கு உடனடி பலன் கிடைத்து. டிப்போவிலிருந்து கூப்பிட்டார்கள் நடத்துனர் செல்லுக்கு (பின்ன சிங்கத்தோட குகைல தெரிஞ்சே தலைய விடுவாங்களா என்ன?). முதல் 5 நிமிடத்துக்கு பயணிக்கு AEவிடம் நேரடியாக பேச தான் ஐடியா தரவில்லை என்றும் அது அவராகவே யோசித்த “சூப்பர்” ஐடியா எனவும் நிறுவப் போராடினார் நடத்துனர். தொடர்ந்து மேலும் ஒரு 5 நிமிடத்துக்கு “சரிங்க சார்”, “ஓக்கேங்க சார்” என மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டே இருந்தார். இறுதியாக ஒரு நிம்மதி கலந்த “தேங்க் யூ”வை உதிர்த்துவிட்டு போனைக் கட் பண்ணினார் நடத்துனர். நாங்கள் எல்லோரும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம்.


“எங்க டிப்போ (திருப்பூர்) வண்டி ஒண்ணு FCக்கு வந்திட்டு இப்ப திரும்பி சூலூர் கிட்ட போய்ட்டிருக்காமாங்க. அத வர சொல்லியிருக்காங்க. ஒரு 20 நிமிசத்துல வண்டி வந்திடும்.” என்றவர் நம் ஹீரோவிடம் சொன்னார் – “ஆனாலும் நீங்க ரொம்ப மெரட்டிட்டீங்க சார். எனக்கே சங்கடம்தான்”. அவர் முடிக்கும் முன் இடைமறித்த ஓட்டுனர் “சும்மாயிருங்கண்ணா.. இப்படி யாராவது பேசினாத்தான் அடங்குவானுங்க. நாம கெஞ்சிட்டிருந்தா காலைல வரைக்கும் கெஞ்ச வேண்டியதுதான். இப்ப பாருங்க அலறி அடிச்சிட்டு வண்டி அனுப்புறாங்க. அவர் செஞ்சதுதாங்க சரி”

இந்த வார்த்தையை கேட்டவுடன் தன் மனைவியைப் பார்த்து நம் ஹீரோ விட்ட லுக்கும் அதற்கு அவர்வீட்டம்மா காட்டிய வெட்க ரியாக்சனும் அந்த நடுராத்திரியில் நடந்த ஒரு ”ஹைக்கூ” கவிதை.

ஏறத்தாழ 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர், ஒருவழியாக 30 நிமிடம் கழித்து வந்த பஸ்ஸில் ஏறி பூண்டியில் நான் இறங்கும்போது மணி அதிகாலை 2.
******முற்றும்****

No comments: